Sunday, October 17, 2004

சிறு வயது சிந்தனைகள் - பகுதி III

ன் சிறுவயதில் நாங்கள் (அம்மா, அக்கா, தம்பி, தாய்வழிப் பாட்டி, தாத்தா) வாழ்ந்தது, திருவல்லிக்கேணியின் பழைய வீடுகளுக்கே உரித்தான அமைப்பு (அகலவாக்கில் சுமார் 14 அடி, நீநீ... நீளவாக்கில் சுமார் 120 அடி!) கொண்ட ஒரு வீட்டில், ஒண்டுக் குடித்தனத்தில் தான். அவ்வீட்டில் எங்களோடு சேர்த்து நான்கு குடும்பங்கள் இருந்தன. அனைவரின் சமையலறைகளும் வீட்டின் தரைப்பகுதியிலும், கூடம் மற்றும் படுக்கை அறைகள் மாடியிலும் அமைந்த ஒரு வித்தியாசமான வீடு அது! உண்பது கீழே! உறங்குவது மேலே (வானொலியில் ஒலிச்சித்திரத்தை கேட்ட பின்னர்)! இரவு வேளைகளில் (9 மணிக்கு மேல்) வீட்டின் கீழ்ப்பகுதியில் பொதுவாக ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்பதால், சமையலறைகளுக்கு அப்பால், வீட்டின் பின்கோடியில் அமைந்த கழிவறைகளுக்கு, மாடியிலிருந்து இறங்கி, இருட்டில் செல்ல சிறியவர்களுக்கு மிகுந்த தைரியம் தேவைப்பட்டது!!! அந்த இக்கட்டான நேரங்களில், துணிவை வரவழைத்துக் கொள்ள ஒரு MGR பாடலையோ அல்லது ஆஞ்சநேயர் ஸ்லோகத்தையோ முணுமுணுத்துக் கொண்டே செல்வது என் பழக்கம்!

அக்கால கட்டத்தில்,எங்களது தூரத்து உறவினர் ஒருவர் என் குடும்பத்திற்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். தந்தையில்லாக் குழந்தைகள் என்று எங்களிடம் மிகுந்த அன்பு செலுத்தினார். அவரை, 'பஜணா' மாமா என்ற 'காரணப்பெயர்' கொண்டழைப்போம்! மாமா அவரது 6-வது வயதில் திருவல்லிக்கேணி வழியாக நடைப்பயணமாக திருமழிசை சென்று கொண்டிருந்த ஒரு பஜணை கோஷ்டியின் பின்னே, கான மயக்கத்தில் சென்று விட்டாராம்! பின்னர், ஒரு பெரிய தேடலுக்குப் பின் மீட்கப்பட்டு, வீடு வந்து சேர்ந்தாராம்! (இதெல்லாம் மாமாவின் தாயார் கூறியது)

அவர் எங்களுக்கு படிப்பு சொல்லித் தருவார். எங்களை திரைப்படம், சர்க்க்ஸ் (ஜெமினி!), மெரீனா கடற்கரை, தீவுத்திடலில் நடக்கும் பொருட்காட்சிகளுக்கு கூட்டிச் செல்வார். மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை, 'ரத்னா கபே' உணவகத்திலிருந்து, காலை சிற்றுண்டி (இன்றும் இட்லி, வடை, முக்கியமாக சாம்பார் அவ்விடத்தில் மிக பிரசித்தம்! சிலர் சாம்பாரை குடிக்கவே செய்வார்கள்!) என்னை வாங்கி வரச் சொல்லி, எங்களோடு சேர்ந்துண்பார். தந்தையார் உயிரோடு இருந்திருந்தால் கூட, அவர் அளவுக்கு இருந்திருப்பாரா என்று எங்களை சில தருணங்களில் எண்ணிப் பார்க்க வைத்திருக்கிறார்! நான் பள்ளியில் பல பரிசுகளை வென்றபோதும், எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தபோதும், அவர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.

கதை கூறுவதில் அவரிடம் ஒரு அசாத்திய திறமை இருந்தது. குறிப்பாக, பல விக்ரமாதித்தன் மற்றும் மஹாபாரதக் கதைகளை மிக அழகாக விவரிப்பார். அவர் தனது நண்பர்களுடன் பார்த்து ரசித்த ஒரு திரைப்படக்கதையை, அப்படத்தின் திரைக்கதாசிரியரையே மிஞ்சும் வகையில், எங்கள் கவனம் சிறிதும் சிதறா வண்ணம், கிட்டத்தட்ட 2 மணி நேரம் கோர்வையாக எடுத்துரைப்பதில் அவருக்கு நிகர் அவரே! ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர், அவருக்கு என் குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் ஏற்பட்ட சிறு மனத்தாங்கல் காரணமாக, உறவில் விரிசல் ஏற்பட்டு, தற்போது எங்களிடையே அதிக பேச்சு வார்த்தை இல்லாவிட்டாலும் கூட, அவரை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

பிறருக்கு உதவும் மனப்பான்மை என்னிடம் இருப்பதற்கு அவரும் ஒரு காரணம். செஸ், டிரேட் (Monopoly) மற்றும் சீட்டில் சில ஆட்டங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அவரே. பின்னாளில் செஸ் அறிவை கூர் தீட்டிக் கொண்டு, GCT-யில் படித்த 4 ஆண்டுகளிலும் கல்லூரி சாம்பியனாகத் திகழ்ந்தேன். 'Literature', 'Patience'(Solitaire போன்றது) மற்றும் 'Trump' போன்ற சீட்டாடங்கள் நிறைய ஆடியிருக்கிறோம். அதிலும் 'லிடரேச்சர்' நமது ஞாபக சக்திக்கு வேலை தரும் அருமையான விளையாட்டு. 4 அல்லது 6 பேர் எதிராடலாம்.

இந்த ஆட்டத்தின் நோக்கம், பலரிடம் பிரிந்திருக்கும் ஒரு ஜாதியை சேர்ந்த சீட்டுக்களை ஒருவர் சேகரித்து, SET சேர்க்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு ஜாதியிலும் A K Q J 10 9 - சீட்டுக்கள் ஒரு SET; 2 3 4 5 6 7 8 - சீட்டுக்கள் ஒரு SET! மொத்த சீட்டுக்களை குலுக்கி ஆட்டக்காரர்களுக்கு பகிர்ந்தளத்த பின், எவரிடம் A Spade உள்ளதோ, அவர் ஆட்டத்தைத் தொடங்கி, சக ஆட்டக்காரர் ஒருவரிடம் தனக்கு வேண்டிய சீட்டு உள்ளதா என வினவுவார். இருந்தால் அதைப் பெற்றுக் கொண்டு, சீட்டை இழந்தவரிடமோ அல்லது மற்றொரு ஆட்டக்காரரிடமோ தனக்கு வேண்டிய அடுத்த சீட்டைக் கேட்டு ஆட்டத்தைத் தொடருவார். அவர் கேட்ட சீட்டு இல்லாத பட்சத்தில், கேட்கப்பட்ட நபர், சீட்டை விளித்து வாங்கும் உரிமை பெற்று, ஆட்டத்தைத் தொடருவார். இதில், சுவாரசியமான விஷயம் ஒன்று உண்டு! ஒருவர், மிகவும் போராடி, ஒரு SET-இல் ஒரு சீட்டைத் தவிர மற்றதை கையகப்படுத்தியிருக்கும் நிலையில், அந்த ஒற்றைச் சீட்டுக்கு சொந்தக்காரர், மற்றனைத்தையும், அவரிடமிருந்து விளித்துப் பிடுங்கி, அழகாக SET சேர்த்து விடுவார்!!!

இக்கட்டுரையை, திருவல்லிக்கேணியில் வாலாஜா சாலையில் அமைந்திருந்த பாரகன் (Paragon தற்போது இடிக்கப்பட்டு அங்கே வானளாவிய அடுக்கு மாடிக் கட்டிடம் தோன்றி விட்டது!) தியேட்டரில் நான் பலமுறை கண்டு களித்த 'இராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடும், என் ஞாபகத்தில் இன்றும் சிறகடிக்கும், வசன பாடல் வரிகளோடு நிறைவு செய்கிறேன்.

தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்!
அவள் தென்மதுரைக் கோயிலிலே சங்கம் வளர்த்தாள்!
தஞ்சையிலே குடி புகுந்து மங்கலம் தந்தாள்! அவள்,
தரணியெலாம் புகழ் பரப்பும் தாயென வந்தாள்,தமிழ்த் தாயென வந்தாள்!

என்றென்றும் அன்புடன்
பாலா

14 மறுமொழிகள்:

அன்பு said...

அதெல்லாம் சரிங்க பாலா...

இதை ஏன் என்னைப்பாத்து சொல்றீங்க:

...சிலர் சாம்பாரை குடிக்கவே செய்வார்கள்!)

enRenRum-anbudan.BALA said...

அன்பு,
நீங்கள் ரத்னா கபேயில் சாம்பாரை குடித்திருக்கிறீகளா என்ன? (அல்லது) உங்கள் ஜோக் எனக்குப் புரியவில்லை என நினைக்கிறேன்!
"பின்னூட்டத்தில் ஒரு வலைப்பதிவுக்கு LINK (உதாரணத்துக்கு, உங்கள் பின்னூட்டத்தில் நீங்கள் "சுந்தருக்கு" என்பதற்கு கொடுத்தது போல்) தருவது எப்படி? நான் S/W ஆள் கிடையாது! H/W designer :-("
இதை முன்னமே ஒரு முறை, ஒரு பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா

அன்பு said...

ரத்னா கஃபே என்றல்ல, டெல்லியிலிருந்த காலம்தொட்டு நல்ல சாம்பார் கண்டால் தாராளமாக ஊத்தி (அதை இப்படியும் சொல்லாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம் - நன்றி புய்ப்பம் திரு. செந்தில்:) சாப்பிடும் பழக்கமுண்டு!

மன்னிக்கவும், நீங்கள் கேட்டிருந்ததை கவனிக்கவில்லையென்று நினைக்கிறேன்.

இந்தவிஷயத்தில் மென்பொருளிலே இருந்தாலும் கூட நானும் அரைகுறைதாங்க... பின்னூட்டத்தில் பதிவுகள் அனுமதிக்கும்பட்சத்தில் பெரும்பாலும் (blogspotல் ஓகே) html tags பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு href (தொடர்பு கொடுக்க) அல்லது இட்டாலிக் அதாவது <i>இட்டாலிக்</i>
போல்ட் அதாவது <b>போல்ட்</b>
போன்றவை.

syntax:
<a href="எதாவது.உரல்">உரலின் பெயர்</a>

அதாவது

<a href="http://kuppai.blogspot.com">குப்பை </a>

அதாவது

குப்பை அதுபோக நான் பயன்படுத்துவது Google Toolbar எனப்படும் ஒரு வஸ்து. இதை இறக்கி ஒருமுறை இன்ஸ்டால் பண்ணிட்டா அது IE உலாவியோடோயே ஐக்கியமாய்டும். அதுல்ல உள்ள ஒரு Options வந்து BlogThis! இது இருந்தால் நமக்கு எந்த பக்கத்தோட href வேணும்னு நெனச்சாலும் அத ஒரு கிளிக் பண்ணாக்க அதோட href முழுமையா வந்திடும். வேணும்னா அதோட பெயர தமிழ்லா மாத்தணும்னா மாத்திக்கிடலாம்.

நான் எப்பொழுதும் இந்த BlogThis! பயன்படுத்தித்தான் நான் என்னுடைய குப்பையிலே குப்பை போடுறதே... இதை முயற்சி செய்து பாருங்கள்.

மேல்விவரத்துக்கு எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன்.

Desikan said...

Bala,
Excellent piece. Again as I have told you earlier. If properly constructed this would be come a good short story. The end is in the middle :-).
From my childhood when ever I come to Chennai, we go to Ratna cafe. My daughter likes the Sambar Idly very much. Mostly all weekends we go there.
- desikan

அன்பு said...

நண்பர் தேசிகனுக்கு வணக்கம்,

தயவுசெய்து சொல்லித்தாருங்களேன்... பாலாவுடைய இந்தப்பக்கத்தை எப்படி சிறுகதையாக மாற்றுவெதென்று? நேரமிருக்கும்போது அதை சிறுகதையாக மாற்றி பாலாவிடம் கொடுத்து மறுபிரசுரம் செய்வோம். சிறுகதை எழுதுவதை பிராக்டிக்கலாக கற்ற அனுபவமிருக்கும் எங்களுக்கு. please...

(அப்புறம் உங்க பொண்ண ரொம்ப கேட்டாதா சொல்லுங்க... சாம்பார் இட்லி விஷயத்துல ஒரே அலைவரிசையிலோ இருக்கிறோம். அவங்களுக்கு என்னோட அன்புப்பரிசு இது.)

said...

அன்பு,
Link கொடுப்பதைப் பற்றிய தாங்கள் அளித்த விவரங்களுக்கு மிக்க நன்றி. இட்லியைப் பற்றி ஒரு கவிதையை வாழ்க்கையில் இப்போது தான் சந்திக்கிறேன்!!!!!

நீங்கள் சாம்பாரை "ஊற்றி அடிப்பவர்" என்ற additional information-க்கும் நன்றி! தாங்கள் சென்னை வரும்போது ரத்னா கபே கட்டாயம் கூட்டிச் செல்கிறேன்!!!

என்னிடம் Google Toolbar ஏற்கனவே இருந்ததால், Blog this option-ஐ மட்டும் enable செய்து கொண்டேன். ரொம்ப useful தான். கீழே, LINK கொடுத்து விட்டேன், பார்த்தீர்களா?!?!

என்றென்றும் அன்புடன்
பாலா

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

Sambhar?

mOppam pidichchu vanthutEnn!!!

http://maraththadi.com/article.asp?id=1268:))

Indianstockpickr said...

உங்கள் சிறுவயது சிந்தனைகளை படித்தவுடன், எனக்கு "deja vu" ஃபீலிங் வந்து விட்டது. என் தாய் வழி தாத்தா, பாட்டி மற்றும் என் மாமா, பெரியம்மா குடும்பங்கள் அனைவரும் திருவல்லிக்கேணி பெல்ஸ் ரோடில் நீங்கள் கூறிய அதே அமைப்பு கொண்ட வீட்டில் வசித்தனர். என் வீட்டிலிருந்து 27'ம் நம்பர் பஸ் பிடித்து சனி ஞாயிறு தினங்களில் அங்கு லூட்டி அடித்த நாட்களை இன்றும் மறக்க முடியாது (பல நாட்கள் literature, bridge, bluff, Ace போன்ற சிட்டாட்டங்களை விளையாடியதும் ஞாபகத்திற்கு வருகிறது). இந்த பசுமையான நினைவுகளை ஞாபகப்படுத்திய உங்களுக்கு ஒரு "ஓ" போடுகிறேன். Well written.

அன்பு said...

ஆஹா... ஆஹாஹா... மதியோட சாம்பார்பாடு புராணத்தைப் படித்தால் என்னைப்போன்று ஒரு பெரிய ரசிகர்மன்றமே அவர்கள் வீட்டில் இருக்கிறது போலிருக்கிறது. நல்லகாரியம் பண்ணாங்க, என்னை எப்போதும் இந்த சாம்பார் விஷயத்தில் கரிச்சுக்கொட்டும் - எங்க வீட்டம்மணியை அதைப்படிக்க சொல்லவேண்டும். அப்படியும் திருந்தாட்டி அம்மம்மாவிடம் ஆசி வாங்கச் சொல்லவேண்டும். அப்படியாவது, வீட்டில சாம்பார் ஒரு சட்டி வச்சாலும் பத்துறதில்லை என்ற கவலைக்கு விடிவுகாலம் வரும்!

enRenRum-anbudan.BALA said...

சந்திரமதி,
எனக்கென்னவோ மதி என்றழைப்பதை விட சந்திரமதி என்று கூப்பிடுவது பாந்தமாக இருப்பதாகத் தோன்றுகிறது. நீங்களும் ஒரு சாம்பார் பிரியை என்பது சிங்கை அன்பு அவர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாய் அமைந்த ஒரு விஷயம்! சாம்பர் புராணம் படித்தேன், மிகவும் ரசித்தேன். இதை 'சந்திரமதி புலம்பல்' (அரிச்சந்திர புராணத்தில் வருமே!) என்றும் கொள்ளலாம்!
என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

இரவிக்குமார்,
பாராட்டுக்கும், 'ஓ' போட்டதற்கும் மிக்க நன்றி. உங்களது பசுமையான நினைவுகளை நினைவூட்டும் வண்ணம் என் கட்டுரை அமைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. NOSTALGIA நோக்கி ஒரு பயணம் மேற்கொள்ள வைத்து விட்டேனோ? 'சிறு வயது சிந்தனைகள் - part IV' தயாராகிக் கொண்டிருக்கிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

Ravi,
'நமது டெஸ்ட் கிரிக்கெட் அணி - ஒரு கண்ணோட்டம்' கட்டுரைக்கு தாங்கள் அளித்த Detailed பின்னூட்டத்திற்கான என் response-ஐ படித்தீர்களா? நீங்களும் பயங்கரமான கிரிக்கெட் ஆர்வலர் போலும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Chandravathanaa said...

பாலா

உங்கள் சிறுவயது சிந்தனைகளை வாசிக்கும் போது எனது சிறுவயது நினைவுகளும் என்னுள் வந்து போகின்றன.
சுவையாக ஒரு கதை போல எழுதுகிறீர்கள். தொடர்ந்தும் எழுதுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

Indianstockpickr said...

Bala,

Just saw your reply to both posts. Of course, cricket is a popular passtime. we will be discussing in lengths when the next test starts. I suspect it will be hard for us to get back into the series, particularly because Nagpur is a batting paradise and Mumbai traditionally helps the tourists. Lets see. eagerly awaiting your next log of siru vayadhu sindanaigal.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails